நிலாவரக்கிணற்றில்
கல்லெறிய ஆசை
அதன் ஆழம் சென்று
திரும்பிவர ஆசை
நெய்னாதீவுக்கு
நீந்திச்செல்ல ஆசை
அதன் நெடுகினில்
மீன்பிடிக்க ஆசை
காங்கேசன் துறையில்
குளிர்காய ஆசை
அதில் நிமிர்ந்துநிற்கும் மரநிழலில்
தங்கிவிட ஆசை
தென்னைத்தோப்புக்குள்
ஒழிந்து கொள்ள ஆசை
அதன் இளநீரைப்பறித்து
பருகிவிட ஆசை
தோட்டக்காரன் தடியெடுத்து
துரத்த ஆசை
நான் அவர்முன் தொடர்ந்து
ஓட ஆசை
ஓடில்லா கூரையால்
வானம்பார்க்க ஆசை
அதன் துண்டுகளை
உதட்டில் ஒட்ட ஆசை
ஓட்டைச்சுவர்களை
தடவிப்பார்க்க ஆசை
அதன்வழியே பச்சிலைகளை
பார்க்க ஆசை
ஓணான் பிடித்த வேலியை
ஒருமுறைபார்க்க ஆசை
அது ஒற்றைக்கம்புடன்
நிற்பதைக்காணவும் ஆசை
மண்ணின் புழுதியில் உருண்டு
விளையாட ஆசை
அதன் வாசனைகளை
முகர்ந்துகொள்ள ஆசை
அதனோடு கூடிவிளையாடிய
தோழனைக்காணவும் ஆசை
ஒற்றை பனையோடு
கதைகள் பேச ஆசை
அவைகளுள்ள தீவுகள்தான்
ஆசையோ ஆசை
ஓலைக்குடிசையில்
உறங்கிட ஆசை
அதன் தேவதைதான்
என் ஆசை
நிஜங்களை நினைத்துப்
பார்க்க ஆசை
அது நிழலாகிப்போனதை
நினைக்கையில்...
நெஞ்சினில்
ஒப்பாரியின் ஓசை.....
கல்லில் சாய்ந்துபோனது
பனைமரமல்ல
எனது பாரம்பரியமான
ஆசைகளும்தான்
தோப்பிலிருந்து தனித்து நின்ற
ஒற்றை பனையானாலும்
மண்ணின் எழுச்சி
உயரத்தில் தெரிந்தது
நான் தனித்து நிற்கும்
ஒற்றை பனை
என் ஓலைகள் உங்களை
வசிறி விடும்.....
No comments:
Post a Comment