Saturday, March 10, 2012

ஒரு அக்கினி மேடை



பத்துமாத விசப்பரிட்சையில்
விடைகண்ட வித்துக்கள் நாம்
அவள் எழுதிய விடைகளில்
பிழைகாணாத வினாக்கள் நாம்

எம்மைச்செதுக்க அடிவாங்கும்
தேய்ந்து போன உளியாவாள்..
எம்மை வளர்க்க உருகிப்போகும்
எரிகின்ற மெழுகாவாள்....

எம் கண்கள் அழும்போது
இதயத்தால் அழுதிடுவாள்..
எம்மிதயம் அழும்போது
உயிர் உருகிவிடுவாள்...

தாயே உன்னைத்தாங்கும் சுவனம்
என்னதான் தவம்கள் செய்தனவோ..
நானும் அச்சுவனம் காணவேண்டும்
உன் பாதங்களை மெதுவாக விலக்கு

உனக்கு பணிவிடைசெய்யவே
இன்னொரு யுகம் வேண்டுகிறேன்
என்னைப் படைத்தவனிடம்
அப்போதும் என்பணி தீராது..
தாயே உன்னிடைவெளி நிரப்ப
இத்தரணியில் ஏதேனும் உண்டோ...?

உன்காதல் ஒன்றேதான்
உலகத்தில் உயர்வானது
உன் உறவொன்றேதான்
உலகத்தில் உயிரானது..

உயிர்களுக்கு விலாசமும்
உறவுகளுக்கு சிறப்பும்
உன்னால் ஆனதம்மா..

ஒரு அக்கினி மேடையில்
அறிமுகமானவர்கள் நாம்
அதே மேடையில் இன்றுவரை
ஆடிக்கொண்டிருப்பவள்தான் தாய்...

காதல் புத்தகம்



ஒரு புத்தகத்தின்
தலைப்பு இது
காதலும் மரணமும்
முகவுரை..!

காதல் மரணத்தின்
விலாசமென்றும்
மரணம் காதலின்
விலாசமென்றுமிருந்தேன்

நான் மரணம் வென்ற
காதல் மாணவன்
இதையெழுதும்
இப்பேனாமுனை...
என் உயிர்த்துணை
எனக்கழித்த
காதலின் வெற்றி முனை...

உயிர்களால்
எழுதப்படும் காதல்
மரணத்தைக்
கடந்த பக்கங்கள்....
வெறும் அழகுக்காய்
எழுதப்படும் காதல்
அசிங்கத்தை
அரங்கேற்றிய பக்கங்கள்....

இருவர் சேர்ந்தெழுதும்
பக்கங்களில்
பூக்கள் கொட்டிக்கிடக்கும்....
ஒருவர் எழுதும்
பக்கங்களில்
முட்கள் நிறைந்து கிடக்கும்....

இருபக்கங்கள் இணையும்போது
படிக்கும் நேரம் நீண்டுசெல்லும்...
ஒருபக்கத்தை
படிக்க நேரம் சுருங்கிவிடும்....

இப்படியான பக்கங்களை
எழுதியவர்கள் ஏராளம்
விலாசம் காதல் ஒன்றே..

மொத்தத்தில்
“காதல்” மரணத்தின்
தொடக்கவுரை....
“மரணம்” காதலின்
முடிவுரை......

ஒரு கவிஞனின் காதல்



என்கண்களும் உன்நினைவுகளும்
விழுந்துவரும் அவ்வரிகளில்
மீண்டும் மீண்டும்
உன்னையே தேடுகின்றன..

வார்த்தைகள் உன்நினைவோடு
முட்டிக்கொள்ளும் போது
என்பேனா முனைகள்
அவ்வரிகளை தடக்கிவிடுகிறது..

சிலநேரங்களில்
நான் எழுதும்கவிதைகள்
என்னைப்பார்த்து சிரிக்கிறது
அப்போது நான் வெட்கித்துப்போவேன்
நீயே என்னைப்பார்ப்பதாய் நினைத்து

கவிதைக்கு அழகு பொய்யென்று
யார்தான் சொன்னது
அதற்கழகே நீதான் பெண்ணே..

என் கவிதையின்
வரிகள் ஒவ்வொன்றிலும்
உன்னைப்பற்றி எழுதுவதனால்
அது அழகு கொள்கிறது...

ஒரு கவிஞனின் அழகு
அவன் காதல்வரிகளில் தெரியும்

ஒரு கவிஞனின் வீரம்
அவன் புரட்சிவரிகளில் தெரியும்

ஒரு கவிஞனின் மனம்
அவன் சமூகவரிகளில் தெரியும்

ஆனால் என்னில் தெரிவதல்லாம்
நீயே நீ மட்டுமே....

ஒற்றைப்பனைமரம்



நிலாவரக்கிணற்றில்
கல்லெறிய ஆசை
அதன் ஆழம் சென்று
திரும்பிவர ஆசை

நெய்னாதீவுக்கு
நீந்திச்செல்ல ஆசை
அதன் நெடுகினில்
மீன்பிடிக்க ஆசை

காங்கேசன் துறையில்
குளிர்காய ஆசை
அதில் நிமிர்ந்துநிற்கும் மரநிழலில்
தங்கிவிட ஆசை

தென்னைத்தோப்புக்குள்
ஒழிந்து கொள்ள ஆசை
அதன் இளநீரைப்பறித்து
பருகிவிட ஆசை

தோட்டக்காரன் தடியெடுத்து
துரத்த ஆசை
நான் அவர்முன் தொடர்ந்து
ஓட ஆசை

ஓடில்லா கூரையால்
வானம்பார்க்க ஆசை
அதன் துண்டுகளை
உதட்டில் ஒட்ட ஆசை

ஓட்டைச்சுவர்களை
தடவிப்பார்க்க ஆசை
அதன்வழியே பச்சிலைகளை
பார்க்க ஆசை

ஓணான் பிடித்த வேலியை
ஒருமுறைபார்க்க ஆசை
அது ஒற்றைக்கம்புடன்
நிற்பதைக்காணவும் ஆசை

மண்ணின் புழுதியில் உருண்டு
விளையாட ஆசை
அதன் வாசனைகளை
முகர்ந்துகொள்ள ஆசை
அதனோடு கூடிவிளையாடிய
தோழனைக்காணவும் ஆசை

ஒற்றை பனையோடு
கதைகள் பேச ஆசை
அவைகளுள்ள தீவுகள்தான்
ஆசையோ ஆசை

ஓலைக்குடிசையில்
உறங்கிட ஆசை
அதன் தேவதைதான்
என் ஆசை

நிஜங்களை நினைத்துப்
பார்க்க ஆசை
அது நிழலாகிப்போனதை
நினைக்கையில்...
நெஞ்சினில்
ஒப்பாரியின் ஓசை.....

கல்லில் சாய்ந்துபோனது
பனைமரமல்ல
எனது பாரம்பரியமான
ஆசைகளும்தான்

தோப்பிலிருந்து தனித்து நின்ற
ஒற்றை பனையானாலும்
மண்ணின் எழுச்சி
உயரத்தில் தெரிந்தது

நான் தனித்து நிற்கும்
ஒற்றை பனை
என் ஓலைகள் உங்களை
வசிறி விடும்.....

ஏழையின் வெள்ளி விழா...



என் சிந்தனைகள்
என்மீது போர்தொடுத்து
என்னை விலக்கி விட்டு
எங்கங்கோ செல்கிறது..

எத்தனையோ கோட்டைக்கு
நான் சொந்தக்காரன்
அத்தனையையும் என் உள்ளம்
வடிவமைத்து கட்டியதே...

பலகோட்டைக்கு அதிபதி நான்
பணை ஓலைதான் என்விரிப்பு
பசியென்று வரும்போது கூட
பானையும் வற்றிப்போய் கிடக்கும்

என்னத்தில் கோடிகளின் வண்ணம்
உள்ளத்திளோ பஞ்சத்தின் தஞ்சம்
இருப்பவனுக்கு அவனைப்பற்றியே என்னம்
இல்லாதவனுக்கோ பலவிதமான என்னம்

விழாக்களும் வினாக்குறியாகும்
புத்தாடை பலமடிப்பிலாகும்
அதுவேதான் பலவருடத்தையும்
சொந்தம் கொண்டாடிருக்கும்

இப்புலுதியில் என்னிறத்தம்
கலந்துபோய் விட்டது
இனி என்னிலிருப்பது
வெரும் என்புக் கூடுகளே...

தேடலில் தொழைந்துபோகும் காலம்..
இதுதான் ஏழைகளின் கோலம்
என் ஏழ்மை வெள்ளிவிழா காண்கிறது
இன்று எனது வயதும் 75து ஆகிறது..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...