ஒரு ஏழையின் முனகல்கள் எனது
எழுத்துக்களில் பின்தெடர்கிறது-இது
ஏட்டில் ஆனவையல்லவே...
வாழ்க்கையின் வடிவங்களை
நிறங்களில்தான் காணமுடிகிறது
நிஜத்தில் காணமுடிவதில்லை
இங்கு வறுமையின் நிறங்களோ
போத்தல்களில் அடைக்கப்பட்டு
விலைகளுக்கு பேரம் பேசப்படுகிறது
தேவைகளை வறுமை மட்டும்
கைதுசெய்து வைத்துக்கொண்டு
வாழ்க்கையோடு விளையாடுகிறது
வட்டமிடப்பட்ட கோட்டிற்குள்
கட்டுப்பட்டு வாழ்ந்த வாழ்க்கை
கட்டவிழ்ந்து வெளியேறி நிற்கிறது
தேகம் இரவுக்குள் ஒழிந்தது - அதில்
உடல் மட்டும் உழைத்துக்கொண்டது
ஊதியம் கை நிரம்பக்கிடைத்தது
இப்போது இந்த வாழ்கையிலும்
கருப்பு நிறம் மட்டும்தான்
வெளிச்சத்தைக் காட்டுகிறது
இரக்கமற்ற ஒவ்வொரு இரவுகளும்
ரணங்களோடுதான் விழித்துக்கொண்டது
இதுதான் காலம் பூசிய வர்ணங்கள்
உயிரை விழுங்கிக்கொண்ட ஓரிரவு
அப்படியே உறங்கிப் போனது
துணையிருக்க யாருமின்றி..!